வற்றாப்பளை கண்ணகியம்மாளின் சிறப்பு (Vattapalai)
வரலாற்று பிரசித்த பெற்ற கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை (Vattapalai) கண்ணகி அம்மன் கோவில் இருப்பது ஈழதேசத்தில் வீரத்தின் விளைநிலமாம் முல்லை மாவட்டத்தில்,கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தின் ஆளுமைக்குள் கிராமபிரிவுக்குள் உள்ளடங்கிய வற்றாப்பளை கிராமம் ஆகும்.
வற்றாப்பளை (Vattapalai) கண்ணகியம்மாள் வந்தமர்ந்த பத்தாவது இடமாகிய பத்தாம்பளை என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.
பளையென்பது தங்குமிடத்தைக் குறிக்கும்.
வற்றாப்பளை அம்மன் வராலாறு (Vattapalai)
முன்பு ஒரு காலத்தில், நந்திக் கடலோரத்தில், ஆட்டிடையர் குலச் சிறுவர்கள் ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி மரத்தின் கீழே இருப்பதைக் கண்டார்கள்.
தனக்குத் தங்குவதற்கு இடமில்லை என அவ்வம்மையார் சிறுவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தது மட்டுமன்றி அம்மையாருக்கு உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.
மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று சிறுவர்கள் மனம் வருந்தினர்.
அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் “பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாகப் பாவித்து, திரிவைத்து விளக்கேற்றுங்கள் என்றார்.
இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறது. தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார்.
மூதாட்டியாரின் தலை முடியை பிரித்த சிறுவர்கள், தலையெல்லாம் கண்களாயிருப்பதைக் கண்டு பயந்து அலர, “நான் ஒரு வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன்” எனக் கூறி மறைந்தார்.
சிறுவர்கள் நடந்ததை ஊர் ஜனங்களுக்கு எடுத்துச்சொன்ன போது அந்த அதிசயம் நடந்த குடிசையிருந்த இடத்தைச் சிறுவர்கள் அவர்களுக்கு காட்டினார்கள்.
அந்த குடில் இருந்த இடத்தில் ஏதோ அதிசயம் இருப்பதாகக் கருதி அவ்விடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி, வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர்.
ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள்.
வைகாசிப் பொங்கல் (Vattapalai)
வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கோயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் மேளதாளத்தோடு ஒரு பித்தளைக் குடத்தை சிலாவத்தை என்ற கடற்கரைக்கு எடுத்துச் சென்று, குடத்தில் கடல் நீரை நிறப்புவார்கள்.
கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது.
குடத்தை நீரோடு முள்ளியவளையில உள்ள காட்டாடி விநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள்.
வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
நடுச்சாமத்தில் பிராமணர்கள் மந்திரம் ஓத, கட்டாடி உடையார் என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி அடுப்பில் வைப்பார்.
உடையாருக்கு உருவந்து, அடியார்களுக்கு கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசையிலும் வானத்தை நோக்கி உயர வீசுவார்.
அவர் வீசும் அரிசி அம்மனின் தோழிகளைப் போயடையும் என்பது நம்பிக்கை. மேலே எறிந்த அரிசி, மண்ணிலோ அல்லது பக்தர்கள் தலையிலோ விழுவதில்லை.
இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இத்தலத்தின் தலவிருட்சம் அனிச்ச மரம்.அனிச்ச மலர் ஒரு மென்மையான மலர்.
வற்றாப்பளை (Vattapalai) அம்மனின் மூலஸ்தானத்துக்கருகே அனிச்ச மரம் ஒன்றுண்டு. இந்த அனிச்ச மரம் பற்றிய ஒரு வரலாறு உண்டு.
வற்றாப்பளை அம்மன் அனிச்சமர வரலாறு
தம் மதத்தைத் தவிர வேறு மதங்களை மதிக்காத போர்த்துக்கேயர் பல சைவ கோவில்களை இடித்துத் தள்ளியதாக வரலாறு கூறுகிறது.
போர்த்துக்கேயர் ஈழத்தை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது.
ஒரு போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது, அம்மனை பரிகாசம் செய்வாராம்.
ஒரு நாள் கண்ணகி அம்மன் கோவில் அருகே வந்து. அனிச்ச மரத்தின் கீழ் குதிரையில் அமர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றியவாறு “எங்கே உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன்.
அது உண்மையானால் இப்போது செய்து காட்டட்டும் “என்றார்.
உடனே தீடிரென அனிச்ச மரம் குலுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத்தொடங்கியது.
மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள், அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல் விழுந்தன. அனிச்சம் காய்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது அதிகாரி காயமடைந்து குதிரையிலிருந்து, மூர்ச்சித்து கீழே விழுந்தான்.
அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்று வரை அந்த அனிச்ச மரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. இதுவும் வற்றாப்பளை (Vattapalai) அம்மனின் அதிசயங்களில் ஒன்று.
பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் காற்சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு
என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.
இக் கிராமம் நாடகம் கூத்துகளுக்கும் பிரபலமானது.
பல மறவர்களை ஈழ மண்ணுக்காக உவந்தளித்து கண்ணகி அம்மனின் துணையுடன் ஓங்காரமாய் வீசும் கடல் காற்றில் ஈழத்தமிழரின் விடியலுக்கு பலகதை பேசுகிறது இக்கிராமம்..!