D விற்றமினின் அவசியம் (Vitamin D)
தற்போதைய உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையினால் எலும்பு/தசை வலிகள் மற்றும் சோர்வு போன்ற மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறிகளுக்கு, மிகப்பெரிய அடிப்படை காரணங்களில் ஒன்று விற்றமின் டி(Vitamin D) குறைபாடு ஆகும்.
விற்றமின் டி (Vitamin D)இன் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்டு வருகிறது. ஏனெனில் இது ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து.
இதனால் ஒருவர் தனது விற்றமின் டி நுகர்வினை கவனத்தில் வைத்திருப்பதும் மற்றும் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியம்.
கரையக்கூடிய கொழுப்பு விற்றமின் டி. மற்ற விற்றமின்களை விட இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த விற்றமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும்.
விற்றமின் டி பற்றாக்குறை உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில், 50 சதவீதம் மக்களை பாதிக்கிறது.76 சதவீதம் இந்தியர்கள் போதுமான விற்றமின் D அளவைக் கொண்டிருக்கவில்லை என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விற்றமின் டி குறைபாடு, குறைந்த எலும்பு நிறை மற்றும் தசை பலவீனத்துடன் தொடர்புடையது.
இதன் விளைவாக எலும்பு முறிவுகள் ,எலும்பு கோளாறுகளான எலும்பு மென்மை நோய்(ஆஸ்டியோமலாசியா) மற்றும் எலும்புத் திண்மக் குறை (ஆஸ்டியோபீனியா), எலும்புப்புரை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதய நோய், வகை 2 நீரிழிவு(Type2 Diabetes), எலும்பு முறிவுகள் , மனச்சோர்வு, புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை வலுப்படுத்துவதற்கு எதிராக விற்றமின் டி சாத்தியமான பங்கை ஆதரிக்கிறது என வளர்ந்து வரும் ஆராய்ச்சி கூறுகிறது.
இதுபோன்றவற்றைத் தவிர்க்க நல்ல ஆரோக்கியத்தின் அடிப்படைகளை கவனித்துக்கொள்வதும் முக்கியம்.
விற்றமின் டிஅதிகம் உள்ள உணவுகள் (Foods high in vitamin D)
சூரிய ஒளி விற்றமின் டி யின் பிரதானமான மூலமாகும். இது ,விற்றமின் டி இன் உள்ளார்ந்த உற்பத்திக்கு உதவுகிறது. இதன் அவசியம் உணர்ந்தே ,யோகாசனத்தில் நம் முன்னோர் சூரியநமஸ்காரத்தை முன்னிறுத்தி உள்ளார்கள் போலும்.!
விற்றமின் டி சத்தானது ,பெரும்பாலும் கிழங்கான் மற்றும் சூரை மீன்கள், மீன் கல்லீரல் எண்ணெய்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை 10 முதல் 3 மணி வரை சூரியனில் 10 முதல் 15 நிமிடங்கள் இருப்பது, உங்கள் தினசரி விற்றமின் டி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடும்.
விற்றமின் டி (Vitamin D) குறைபாட்டிற்கு என்ன காரணம்?(causes to vitamin D deficiency?)
பொதுவாக வெயிலில் போதுமான நேரத்தை செலவிடாதவர்கள் விற்றமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். வெயிலில் செலவழித்த நேரத்தைத் தவிர, சூரிய ஒளி மிகவும் பலவீனமாக இருந்தாலும், அல்லது பயன்படுத்தப்படும் சூரிய திரை திரவத்தின், சூரிய பாதுகாப்பு காரணி 30க்கு மேல் இருந்தாலும் என பல காரணங்களாலும் விற்றமின் டி குறைபாடு ஏற்படலாம்.
உங்கள் சருமத்தின் நிறம்(Skin tone) , உங்கள் உடலில் விற்றமின் டி அளவை உற்பத்தி செய்ய, வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியத்திற்கும் பங்களிக்கிறது.
உடல் பருமன் விற்றமின் டி குறைபாட்டுடன் தொடர்புடையது.
பொதுவாக உடல்பருமன் உள்ளவர்களுக்கு விற்றமின் டி குறைவாக உறிஞ்சப்படுவதாலும், சிறுகுடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாதநிலையில் கொழுப்பு வெளியேற்றாமல் இருப்பதாலும் உடல் பருமன் ஏற்படுகிறது.
வயது அதிகமாக மெதுவாக உடலின் விற்றமின் டி ஒருங்கிணைக்கும் திறன்களைக் குறைவதால், நிச்சயமாக விற்றமின் டி குறைபாட்டுக்கு, வயது மிக முக்கியமான காரணமாகும்.
ஆனால், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், இந்த ஒட்டுமொத்த விளைவுகளை குறைக்க இயலும்.
விற்றமின் டி குறைபாட்டை அறியும் முறை
இரத்த பரிசோதனையின் மூலம் விற்றமின் டி குறைபாட்டை மட்டுமே கண்டறிய முடியும்.
விற்றமின் டி பயன்கள் (Benefits of D-vitamin)
விற்றமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் எளிதில் கல்சியத்தை உறிஞ்ச உதவும்.
ஒருவருக்கு விற்றமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் விற்றமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
விற்றமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும்.
இதய ஆரோக்கியம்
இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள்.
ஆஸ்துமா
அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
விற்றமின் டி மற்றும் கல்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும்.