சர்வதேச மகளிர் தினம் (Women’s Day)
உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ (Women’s Day) கொண்டாடப்படுகிறது.
மென்மையும், வன்மையும் கலந்த புதுமையான பெண்மையை போற்றுவது ,பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் (Women’s Day)நோக்கமாகும்.
சர்வதேச மகளிர் தினத்தை உலகம் முழுவதும் பல்வேறு வகையாக கொண்டாடுகிறார்கள். இப்போது போலவே அந்தக் காலத்திலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளை செய்தனர். ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் வேறுபாடு இருந்தது.
இத்தகைய ஏற்றத்தாழ்வை எதிர்த்து, 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் பெண்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்வுதான் சர்வதேச மகளிர் தினத்துக்கு வித்திட்டது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெர்மனி நாட்டின் புரட்சிப்பெண் கிளாரா ஜெட்கின், மகளிருக்காக தனி நாள் ஒன்று வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதை சில நாடுகள் ஏற்றுக்கொண்டன.
ஆனால் மகளிர் தினத்துக்கென்று குறிப்பிட்ட தேதியை அறிவிக்காமல், ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தேதியில் கொண்டாடின. இந்த நிலையில்தான், மகளிர் தினத்துக்கு ஆதரவு கொடுக்காத மற்ற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
1917-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த ‘பெண் புரட்சியாளர்களின் போராட்டம்’. அதன்பின்னரே, மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக (Women’s Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1975-ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபை இந்த தினத்தை அங்கீகரித்தது. அப்போது முதல், உலகம் முழுவதும் மகளிர் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.
பல்வேறு நாடுகளில் மகளிர் தினம் (Women’s Day)
மாசிடோனியா, உஸ்பெகிஸ்தான், செர்பியா, அல்பேனியா போன்ற நாடுகள் மகளிர் தினத்தை, அன்னையர் தினத்துடன் இணைத்துக் கொண்டாடுகின்றன.
பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அன்றைய தினத்தை ஒருங்கிணைந்த விடுமுறை நாளாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா, மார்ச் மாதத்தை பெண்கள் வரலாற்று மாதமாக அறிவித்தார்.
அங்கு பல்வேறு தடைகளைத் தாண்டி சாதித்த பெண்களையும், அவர்களின் சாதனைகளையும் வெளியிட்டு கௌரவிக்கிறார்கள். இங்கிலாந்தில் மகளிர் தினம் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.
அங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் இதை கொண்டாடுகின்றனர். அப்போது உலக அளவில் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, முக்கிய பிரபலங்கள் மூலம் அதற்கு தீர்வு காண்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இத்தாலியில், சர்வதேச மகளிர் தினத்தை (Women’s Day), ‘லா பெஸ்ட்டா டெல்லா டோன்னா’ என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த மாதத்தில் அங்கு பூக்கும் ‘மிமோசா’ மலர்களை பெண்களுக்கு கொடுப்பது, அவர்களை கவுரவப்படுத்துவதாக கருதப்படுகிறது. ‘மிமோசா’ மலர்கள், பெண்களின் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
ரஷ்யா,உக்ரைன் போன்ற நாடுகளில் , மார்ச் 8-ந் தேதி தேசிய விடுமுறை தினமாக உள்ளது.
சம உரிமையை வலியுறுத்தும் வகையில் அன்று ஆண்கள், வீட்டிலுள்ள பெண்களுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து, பரிசுப் பொருட்கள், ரோஜா, மஞ்சள் நிற மிமோசா மலர்களுடன் கௌரவிப்பார்கள்.
இது ஒருபுறமிருக்க, சிறு குழந்தை பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத நிலையே இன்னும் உள்ளது. சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்ந்த வண்ணமேஉள்ளது.
ஒரு சில நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ,பகலில் கூட பொது இடங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
இந்நிலையில் ஒவ்வொருவருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. முக்கியமாக பெண்கள் இந்த அவல நிலைமையை மாற்ற வேண்டும்.
அன்றுதான் உண்மையான மகளிர் தினம்!!