அழகு தரும் யோகா (Yoga for Beauty)
யோகா (Yoga for Beauty) என்பது உடலின் உள்,வெளி முழுமையான ஆரோக்கியத்தின் ஒரு வடிவமாகும். யோகாபயிற்சிகள் உடலும் மனமும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக செயல்பட உதவுகின்றது. இதனால் பிரகாசமான மற்றும் ஒளிரும் சருமத்தை (Yoga mudras for Beauty) பெறலாம்.
நமது சருமமானது நம் உள் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு போர்வை.
சருமத்தில் வெடிப்புகள், தடிப்புகள் மற்றும் முகப்பருக்கள் ஏற்பட மன அழுத்தம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.
பிராணாயாமம் எனப்படும் சுவாசபயிற்சிகள் நுரையீரல் திறனை அதிகரிக்கும் மற்றும் நன்றாக சுவாசிக்க உதவும். தியான நுட்பங்கள் உங்கள் உள்ளுணர்வு உணர்வை உயர்த்துகின்றன, மனதில் நம்பிக்கையையும் தெளிவையும் தருகின்றன.
இந்த வழியில், யோகாவின் ஒவ்வொரு அம்சத்திலும் நம்முடைய தற்போதைய நிலையை மேம்படுத்த முடியும்.
யோகா உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை நீக்கி சுத்திகரிக்கிறது. முறையற்ற குடல் இயக்கம், அஜீரணம் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சினைகளை நீக்கி யோகா செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் ,இயற்கையாகவே ஒளிரும் சருமத்தை யோகாவினாலேயே பெறலாம்.
யோகா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் பல நோய்களைத் தடுக்கிறது.
சரும அழகை மேம்படுத்தும் சில யோகாசனங்கள் (Yoga mudras for Beauty)
சூரிய நமஸ்காரம்
சூரிய வணக்கம் தினமும் அதிகாலையில் செய்யவேண்டும்.
இது வலிமை, நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
பாதஹஸ்தாசனம்
இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும்.
மூச்சை உள்ளே இழுத்து உங்கள் உடலை முன்னோக்கி வளைக்கவும்.
கால்விரல்கள் வரை உடலை கொண்டு வந்து அதனை பிடிக்கவும்.
உங்கள் தலையை முழங்கால்களை நோக்கி வையுங்கள்.
மெதுவாக மேலே வந்து ஓய்வெடுங்கள்.
சர்வங்காசனம்
முதுகை தரையில் வைத்து மல்லாந்து படுத்து மெதுவாக உங்கள் கால்களை தரையில் இருந்து தூக்குங்கள்.
மெதுவாக உங்கள் இடுப்பை தூக்கி தரையில் இருந்து மேலே செல்லுங்கள்.
தடுமாறாமல் இருக்க உள்ளங்கைகளை முதுகில் வையுங்கள்.
தோள்பட்டை, உடல், இடுப்பு மற்றும் கால்களை சீரமைக்க முயற்சியுங்கள்.
பார்வையை கால்களை நோக்கி கவனம் செலுத்துங்கள்.
ஹலாசனம்
உடலின் இருபுறத்திலும் உள்ளங்கைகளை வைத்து முதுகை தரையில் வைத்து படுத்துக் கொள்ளுங்கள்.
கால்களை மேலே உயர்த்தி, உங்கள் உள்ளங்கைகளை தரையில் அழுத்தி, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள்.
உள்ளங்கைகளைப் பயன்படுத்தி பின்புறத்தை பிடித்து கொள்ளுங்கள்.
இதே நிலையில் சிறிது நேரம் இருங்கள்.
சிரசாசனம்
முழங்கைகளை கீழே வைத்து அவற்றை இணைக்கவும்.
உள்ளங்கைகள் மற்றும் முழங்கைகளுடன் தரையில் ஒரு முக்கோணத்தை உருவாக்குங்கள்.
தலையை உள்ளங்கைகளுக்கு முன்னால் தரையில் வைக்கவும்.
உள்ளங்கைகளால் உங்கள் தலையின் பின்புறத்தை பிடித்து கொள்ளவும்.
முதுகு நேராக மாறும் வரை உங்கள் கால்விரல்களை உங்கள் தலைக்கு அருகில் எடுத்து செல்லவும்.
முதலில், உங்கள் ஒரு காலை மேலே தூக்கி, மெதுவாக உங்கள் இரண்டாவது காலை மேலே தூக்குங்கள்.
நீங்கள் வசதியாக இருக்கும் வரை இந்த நிலையை வைத்திருங்கள்.
உடலை கட்டுக்கோப்பாக வைக்க, ஜிம்மிலும், கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்தை கச்சிதமாக பராமரிக்க மணிக்கணக்காக செலவிடுவதைப் போல முக அழகை மேம்படுத்த, நாளும் அரைமணி நேரம் யோகா செய்ய ஒதுக்கினால் போதும்.
உண்மையில், ஒரு இளமையான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக ஒளிரும் முகத்தை, பெறுவது மிக எளிதாகும்.
முக அழகிற்கான சில யோகா முத்திரைகள் (Yoga mudras for Beauty) வீடியோவில் காணலாம்.
முக அழகிற்கு யோகா
நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மெருகேற்றக்கூடிய பயிற்சிகள் மற்றும் நுட்பங்கள்/முத்திரைகள் யோகாவில் உள்ளன. முகத்தில் மட்டும் தான், தசைப்பகுதி எலும்பில் ஒட்டாமல், தோலுடன் நேரடியாக ஒட்டியுள்ளது.
முகத்தில் உள்ள தசைகளுக்கு தினமும் பயிற்சி தருவதால், முகப் பொலிவை சீராக்கி, முகத்தின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதன்மூலமாக, உணர்ச்சியின்றி, தொள தொளவென தொங்கும் முகத்தை குறுகிய காலத்திலேயே, பொலிவான உறுதிமிகுந்த முகமாக மாற்றிவிடலாம்.
யோகா எப்படி சரும அழகை மேம்படுத்துகிறது?
சூட்சும யோகா என்ற யோக நுட்பத்தில் குறுகிய, எளிதான பயிற்சிகளே உள்ளன. இதைச் செய்வதால், சில நிமிடங்களிலேயே, முகத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கும்.
சிம்ம முத்திரை போன்ற ஆசனங்களை செய்வதால், தசைப்பகுதிகள் மற்றும் நரம்பு இணைப்புகளில் இறுக்கம் தளர்ந்து, முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம்.
அடிப்படையில், இது முகத்தின் தசைகளுக்கு புத்துணர்வு அளித்து, சருமத்தின் கீழே உள்ள தசைகளில் வளர்ச்சியை ஊக்குவித்து, வயது முதிர்வு வராமல் எதிர்க்கச் செய்கிறது.
முக யோகா கழுத்து, வாய், கன்னங்கள், கண்கள், நெற்றி. இவற்றை மெருகேற்றுவதால், அது சார்ந்த இணைப்புத் திசுக்களிலும் மேம்பாடு ஏற்பட்டு, அங்கே ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது.
இதனால் முகச் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து, இளமையான, மிருதுவான சருமம் கிடைக்கிறது.
இளமையை தரும் யோகா (Yoga for Beauty)
வயதாகும் போது, நம் முகத்தில் தோலின் நெகிழ்வுத் தன்மை மறைய நேரிடும். இதனால், சருமத்திற்கும், தசைப்பகுதிகளுக்கும் இடையே உள்ள கொழுப்புப் பட்டைகள், தங்களது பிடியை இழந்துவிடுகின்றன.
எனவே, முகத்திற்கு ஒரு தளர்வான தோற்றம் கிடைக்கிறது. எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும், கண்களின் கீழேயும், வாய் மற்றும் முன்நெற்றி பகுதிகளில் சுருக்கம் விழ நேரிடும்.
இந்த சூழலில், முக யோகாவில் உள்ள எளிதான பயிற்சிகளைச் செய்தால், முக சருமத்தின் கீழே உள்ள தசைகளுக்கு புது ஊக்கம் கிடைக்கும். இயற்கையாகவே, முகம் இளமையாக, மிருதுவாக மாறிவிடும்.
முக யோகாவில் உள்ள சிறப்பு அம்சம், கண்களைச் சுற்றியுள்ள தசைகள் இறுகி, சுருக்கம் மறைந்து, கண்களுக்கு புது ஒளி கிடைக்கும்.
இதனால், கண்கள் இளமையாகவும், சோர்வு குறைந்ததாகவும் பளிச்சிடும்.
இளமையான முகம் பெற சில நுட்பங்கள் (Yoga for Beauty)
- வாய் வழியாக மூச்சை இழுத்து, கன்னங்களை உப்பச் செய்ய வேண்டும். உப்பிய கன்னங்களில் உள்ள சுவாசக் காற்றை 10-15 முறை, பலவிதமாக, மாற்றி மாற்றி தள்ளிவிட வேண்டும்.
- உதடுகளை ஒன்றாக குவித்தபடி, சிரிக்க வேண்டும். ஆனால், பற்களை வெளியே காட்டக்கூடாது. கன்னத் தசைகளை மேல்புறமாக தள்ள வேண்டும்.
- வாயின் இரு மூலைகளிலும், கை விரல்களை வைத்து, அவற்றை கன்னம் வரை மேலே நகர்த்திச் செல்ல வேண்டும். அப்படியே 20 விநாடிகள் வைத்திருப்பது நலம்.
- அவ்வப்போது, சில முறை ‘ஈ’ ‘ஓ’ எனச் சொல்வதால், கன்னத் தசைகள் உறுதியாகும்.
முக யோகா எளிதானது, எங்கு வேணாலும், எந்த நேரத்திலும் செய்யக்கூடியதாகும். இதன் நன்மைகள், மிகக்குறுகிய நேரத்திலேயே வெளிப்படையாக தெரியும்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சுவிட வேண்டும். அப்போது மூச்சில் முழு கவனத்தையும் செலுத்தவேண்டும்.
அந்த நேத்தில் அவரவருக்கு பிடித்த கடவுளை மனதில் நினைத்து பிரார்த்திக்கலாம்.
பின்பு உடலை இலகுவாக்குவதற்கான ‘லூசிங் எக்ஸசைஸ்’ (Loosing exercise) செய்யவேண்டும். அப்போது கை, கால் விரல்கள், மூட்டு, இடுப்பு போன்ற பகுதிகளை ‘ரொட்டேட்’ செய்யவேண்டும்.
பின்பு விருட்சாசனம், புஜங்காசனம், அர்த்த மச்சேந்திராசனம், சக்கராசனம் போன்றவைகளை செய்யலாம்.
இதன் மூலம் நுரையீரல் வலுப்படும். முதுகெலும்பு பலமாகும். மனஅழுத்தம் நீங்கும். தொப்பை குறைந்து உடல் கட்டுக்குள் வரும். தலைவலி போகும். சோம்பல் அகலும். உடலும், மனதும் புத்துணர்ச்சி கொள்ளும்.
பிரணாயாமம் 5 நிமிடம் மேற்கொள்வது அவசியம். இறுதியாக 10 நிமிடங்கள் செய்ய வேண்டியது, யோக நித்திரை. இதை சவாசனம் என்றும் சொல்வார்கள்.
அறையில் உங்களுக்கு பிடித்த இசையை ஓடவிட்டு படுத்த நிலையில் உடலை ஓய்வாக்கவேண்டும். அப்போது சிந்தனை முழுவதையும் இசையில் ஐக்கியப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தினமும் அரைமணி நேர யோகா பயிற்சியால் அன்றாட வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழும். உடல் வலுப்பெறும். உள்ளம் மகிழ்ச்சியடையும். அந்த மகிழ்ச்சி குடும்பத்தில் எதிரொலிக்கும்!