சிறுவர்களுக்கான சிறந்த யோகாசனங்கள் (Yoga for kids)
சிறு வயதிலிருந்து யோகா (Yoga for kids) செய்ய தொடங்கினால் ஞாபகத்திறன்,ஆற்றல் ஆளுமை, மன ஒழுக்கம் எல்லாம் இயல்வாகவே அவர்களுக்குள் வந்துவிடும்.
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.
உங்கள் பிள்ளைகளையும் செய்ய பழக்குங்கள்.ஊக்குவியுங்கள்.
யோகா எனபது நமது முன்னோர் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி. யோகா பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொண்டு தினமும் தவறாமல் செய்து வந்தால் நன்மைகள் ஏராளம்.
உடல் எடையை குறைக்க, மனதை வலிமையாக்க, மன அழுத்தத்தை குறைக்க, அழகாக என பல வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
தினமும் யோகா பயிற்சிகளை தவறாமல் செய்துவந்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் காணாமல் போகும்.அமைதி , சாந்தம், நேர்மறை எண்ணங்கள் வெளிப்படும்.
குழந்தைகளுக்கு என தனியாக ஆசனங்கள் இருக்கின்றன. சிறுவயதிலிருந்தே யோகா (Yoga for kids) செய்வதால் உடல் உறுதியாவதுடன், மன வலிமை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கானயோகா பயிற்சியிகள் (Yoga for kids)
விருட்சாசனம்
விருட்சம் என்றால் மரம். மரம்போல் கைகளை உயர்த்துவதால் இந்தப் பெயர்.
இதைச் செய்யும்போது கால்களைச் சேர்ந்து வையுங்கள். கைகளை உடம்போடு ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஒரு காலை மடித்து, உள்ளங்காலை மற்றொரு காலின் தொடையில் பதியுமாறு ஒற்றைக் காலில் நில்லுங்கள்.
பின் இரு கைகளையும் தலைக்கு மேல் நன்கு உயர்த்துங்கள். 10 எண்ணும்வரை இப்படி நில்லுங்கள். பிறகு, அடுத்த காலை மடித்து இதேபோல் செய்யுங்கள்.
தொலைவில் உள்ள பொருள் அல்லது புள்ளி ஒன்றின் மீது கவனம் செலுத்தினால், ஆடாமல் அசையாமல் நிற்க முடியும். இந்த ஆசனத்தால், மனம் ஒருமுகப்படும்.
வஜ்ராசனம்
வஜ்ரம் என்றால் வைரம். உடலுக்கு வைரம்போல உறுதியைத் தரக்கூடிய ஆசனம் இது. இதை எப்படிச் செய்வது?
சாதாரணமாக உட்காருங்கள். முதலில் வலது காலை மடித்து, வலது குதிகாலில் நமது பின்பக்கம் நன்கு அழுத்துமாறு உட்காருங்கள்.
இதேபோல இடது காலையும் மடித்து, இரு குதிகால்களிலுமாகச் சேர்ந்து உட்காருங்கள். ஆரம்பத்தில் இப்படி உட்கார்ந்து 10 வரை எண்ணிக்கொள்ளுங்கள். பிறகு இந்த நேரத்தைப் படிப்படியாகக் கூட்டிக்கொள்ளலாம்.
வஜ்ராசனம் செய்தால், உடலின் மேல்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால், உள் உறுப்புகள் நன்கு இயங்கும். சீக்கிரம் செரிமானம் ஆகும். வீட்டில் சாதாரண நேரத்தில் கூட வஜ்ராசனத்தில் அமர்வது நல்லது.
தோப்புக்கரணம்
பள்ளிக்கூடங்களில் தண்டனையாக தோப்புக்கர்ணம் போடும்படி ஆசிரியர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தோப்புக்கர்ணம் மிகச் சிறந்த யோகாசனங்களில் ஒன்று.
காதுகளைப் (கர்ணம்) பிடித்துச் செய்வதால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. இதைச் செய்வது மிகவும் எளிது.
இடது கையால் வலது காதைப் பிடியுங்கள். வலது கையால் இடது காதைப் பிடியுங்கள். மூச்சை வெளியே விட்டபடியே காலை மடக்கி உட்காருங்கள். மூச்சை இழுத்தபடியே எழுந்து நில்லுங்கள். இதுபோல 8 – 10 முறை செய்யலாம்.
வெளிநாடுகளில் இதை ’சூப்பர் பிரைன் யோகா’ என்று சொல்லி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கர்ணம் போடுவது பிரபலமாகி வருகிறது.
இது மூளை நரம்புகளைத் தூண்டுவதால் மனம் ஒருமுகப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். படிப்பிலும் கவனம் கூடும்.
பர்வதாசனம்
பர்வதம் என்றால் மலை. உடலை மலைபோல வளைப்பதால் இந்தப் பெயர் வந்தது.
முதலில் ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராவதுபோல, ஒரு காலை மடித்தும், இன்னொரு காலைப் பின்னால் நீட்டியும் வைத்துக்கொள்ளுங்கள். மடித்திருக்கும் காலையும் பின்னால் நீட்டி, முதுகுப் பகுதியை மேலே உயர்த்தி, உடலை ஒரு குன்றுபோன்ற நிலைக்குக் கொண்டுவாருங்கள். இதில் உள்ளங்கால் முழுவதும் தரையில் பதிந்திருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். பார்வை அடிவயிற்றை நோக்கி இருக்க வேண்டும்.
இதை 10-15 எண்ணிக்கைவரை செய்யுங்கள். பிறகு, காலை மீண்டும் முன்னோக்கி (ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராவதுபோல) கொண்டு செல்லுங்கள்.
இதைச் செய்தால் கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவடப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.
தனுராசனம்
குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையால் வலது கணுக்காலையும் இடது கையால் இடது கணுக்காலையும் உறுதியாகப் பிடியுங்கள்.
மெதுவாகத் தலை, கழுத்து என உடலின் மேல் பகுதியைத் தரையைவிட்டு மேலே உயர்த்துங்கள். கால்களை நன்றாக வளைத்த நிலையில், இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்துங்கள்.
வயிற்றுப் பகுதியைத் தவிர உடலின் அனைத்துப் பாகங்களையும் வில் போல உயர்ந்த நிலைக்குக் கொண்டுவாருங்கள். இந்த நிலையில் 10-15 எண்ணிக்கைவரை இருக்கலாம்.
தனுராசனம் செய்வதால் மூச்சு சீராகிறது. கை, கால், முட்டி, முதுகு, இடுப்புப் பகுதிகள் உறுதியடையும்.
பத்மாசனம்
நேராக உட்கார்ந்து கொள்ளவும். வலது உள்ளங்காலை இடது தொடைக்கு மேலாகவும் இடது உள்ளங்காலை வலது தொடைக்கு மேலாகவும் வைத்துக்கொண்டு, கண்களை மூடிய நிலையில் உட்காருங்கள்.
இது சிரமமாக இருந்தால், ஏதாவது ஒரு காலை மட்டும் இன்னொரு தொடைக்கு மேல் வைத்துக்கொண்டு அமரலாம். கை கட்டைவிரல் – ஆள்காட்டி விரல் நுனிகளை மட்டும் இணைத்து, மற்ற 3 விரல்களையும் நீட்டியவாறு வைத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு ‘சின்முத்திரை’ என்று பெயர். நிதானமாக மூச்சை இழுத்து, மூச்சை வெளியே விடவும். இயன்றவரை பத்மாசனத்தில் அமரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க யோகா
சிறுவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் 5- 10 நிமிடங்கள் யோகா செய்தால் உடலின் எதிப்பு சக்தி நன்றாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், சாதாரண சளி, காய்ச்சல், சுவாச கோளாறுகள் என எதுவும் நமாமி நெருங்காது.
யோகாசனம் செய்யும் போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து உறுப்புகளின் இயக்கம் சீராகும். யோகா பயிற்சிகளினால் முக சரும அழகு அதிகரிக்கும்.
ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
இதனால் மனம் ஓய்வடைகிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. வெகுநேரம் படிக்கும் மாணவர்கள், மற்றும் தற்போதைய சூழ் நிலையில் அதிகமாக ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையிடையே இவ்வகையான ஆசனங்கள் செய்வது நல்லது.