இணையம் மூலம் யோகா கற்கலாமா?(Yoga learning)
தற்போது உடற்பயிற்சி, யோகா என பலவற்றை இணையத்தில் பார்த்து கற்றுக்கொண்டு (Yoga learning) தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் முயற்சியில் அனைத்து வயதினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுக்கொள்பவர்களே இவ்வாறு தவறுகள் மேற்கொண்டு, பிறகு அந்த தவறுகளை சரி செய்ய தங்கள் பயிற்சியாளர்களை அணுகி அதற்கேற்ப ஆசனங்களையும் முத்ராகளையும் கற்றுக்கொண்டு உடல் நல பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.
ஒருவர் தானாக யோகா கற்றுக்கொள்ளும்போது அது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
எடுத்துக்காட்டாக கபாலபதி பிராணாயாமம் மேற்கொள்வது எப்படி என்பதை நாம் காணொளியில் பார்க்க முடியும். ஆனால் நாம் உண்மையில் அதை சரியாக பின்பற்றுகிறோமா என்பதை ஓர் ஆசிரியர் தான் சொல்ல முடியும். கபாலபதி மிகவும் பயனுள்ள மூச்சு பயிற்சி.
ஆனால் இதை இதயநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக இந்த முச்சு பயிற்சி மேற்கொண்டால் ஹெர்னியா, நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே இந்த பயிற்சிக்கான பலன்கள் நல்ல முறையில் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், தனிநபர் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் தேவை.
யோகாசன பயிற்சி எப்படியெல்லாம் செய்யக் கூடாது?(Learning yoga)
பாடல் அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்ளவதால் மனம் அமைதி அடையும் என பலர் கருதுகிறார்கள்.
ஆனால் அவ்வாறு யோகாசனம் மேற்கொள்ளும் போது நம் கவனம் இசையில் மூழ்கிவிடலாம். அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாது.
உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல்படுவதே யோகா. அதனால் சற்று அமைதியான சூழலில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
அனைவரும் அதிகாலை எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொண்டு இரண்டு மணி்நேரத்திற்கு பின் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
8 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆசனங்கள் மேற்கொள்ள கூடாது. குழந்தைகள் தானாக முன்வந்து ஆர்வம் காட்டினால் பெற்றோரின் கண்காணிப்பில் எளிமையான யோகாசனங்களை (Yoga learning) கற்றுக் கொடுக்கலாம்.
பயிற்சியாளர்கள் சொல்வதை கருத்தில் கொள்ள வேண்டும்
எடுத்துக்காட்டாக பர்வதாசனம் என்ற ஆசனத்தால் உடல் எடை குறையும். பெரும்பாலும் பெண்கள் இந்த ஆசனத்தை விரும்பி மேற்கொள்வார்கள்.
காரணம் மலை வடிவில், உடலை வணங்கி நிற்க வேண்டும். தலைப்பகுதி கீழ் நோக்கி இருக்கும்போது நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் தலைமுடி கொட்டாமல் நன்கு வளரும். எனவே பலர் இந்த ஆசனத்தை வீட்டிலும் சென்று காலை ஒரு முறை மாலை ஒரு முறை மேற்கொள்வார்கள்.
ஆனால் ஆரம்பகட்டத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளும் போது 3 வினாடிகள் அல்லது 5 வினாடிகள்தான் மலை வடிவில் நிற்க வேண்டும்.
இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று முறை மேற்கொள்ளலாம். பலர் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப கட்டத்திலேயே பயிற்சியாளருக்கு தெரியப்படுத்தாமல் 15 வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை மேற்கொள்கிறார்கள்.
இதனால் தலை வலி, முதுகு வலி என பல உடல் பிரச்சனைகள் ஏற்படும். எனவே பயிற்சியாளர்கள் சொல்லும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் .குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சி
பொதுவாக மாதவிடாய் காலத்தில் 3 நாட்களுக்கு யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. குறிப்பாக உடல் தலைகீழாக இருக்கும் நிலையில் உள்ள எந்த ஆசனமும் மேற்கொள்ள கூடாது.
தலைகீழாக இருக்கும் அத்தனை ஆசனங்களாலும் உடலில் அதிக வெப்பம் உண்டாகும். இது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் கால் வலி, மூட்டு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்கிறவர்கள், வஜ்ராசனம், பத்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை மேற்கொள்ளலாம்.
மேலும் பத்ராசனா என்று கூறப்படும் பட்டர்ஃபிலை ஆசனம் மேற்கொள்ளும் போது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடலாம்.
இருதய பிரச்சனைகள் உள்ளவர்கள் உடலை பின்பக்கம் வளைக்கும் ஆசனங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே போல முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனங்கள் மேற்கொள்ளும் போது, பயிற்சியாளர்கள் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
முதுகு வலி மற்றும் பிற உடல் வலிகள் உள்ளவர்கள் முதல் கட்டமாக பிராணயாமம் போன்ற முச்சு பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்தலாம்.
ஆனால் இதே பிராணயாம முச்சு பயிற்சியை கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் புண் (அல்சர்) இருப்பவர்கள் மேற்கொள்ள கூடாது.
சூரிய முத்ரா மேற்கொள்வதனால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். மேலும் காலை 5 முதல் 8 மணிக்குள் இந்த சூரிய முத்ரா பயிற்சி மேற்கொள்ளலாம் .
அல்லது மாலை 4ல் இருந்து 6 மணிக்குள் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த சூர்ய முத்ராவை 15 நிமிடங்கள் மேற்கொண்டால் போதும்.
அதற்கு மேல் இதே பயிற்சியை மேற்கொண்டால் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும்.
இந்திர முத்ராவை அதிகநேரம் மேற்கொண்டால் அளவுக்கு அதிகமாக உடல் குளுமை அடையும். அதனால் சளி, தலை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம்.
எனவே ஏற்கனவே சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்திர முத்ராவை தவிர்ப்பது நல்லது.
யோகா நிபுணர்களின் கண்காணிப்பில் மட்டுமே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிலர் உடல் வலியில் இருந்து வெளிவர யோகா கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் அந்த வலி ஏற்பட்டதன் காரணத்தை கண்டறிந்து பிறகு யோகா கற்றுக்கொண்டு, அதன் மூலம் தீர்வு காண்பதே நன்மை அளிக்கும்.
எந்த உடல் நல பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க எளிய முறையில் நோய் தடுப்பு பயிற்சியாக யோகா மேற்கொள்வது நல்லது.
நிபுணர்களின் உதவியுடன் யோகாவை சிகிச்சை முறையாக பலர் பின்பற்றுகிறார்கள் ஆனால் நோய் தடுப்பிற்காகவும் ஊட்டச்சத்து அதிகரிக்கவும் யோகா கற்றுக்கொள்வது இன்னும் அதிக சிறப்பாக அமையும்.